பிதாமகர் பீஷ்மரையும்,துரோணரையும்,கர்ணனையும்,துரியோதனன் முதலான தம்பியரையும் , எண்ணற்ற வீரர்களையும் யுத்த களத்தில் இழந்த பின் பெற்ற அரசாட்சியில் தருமருக்கு மகிழ்ச்சி ஏதுமில்லை.நாடாளும் மன்னன் என்னும் பெருமிதமும் இல்லை.நாட்டைக் காவல் புரியும் ஒரு காவல்காரனாகவே தம்மைக் கருதி நாட்டை ஆளத் தொடங்கினார்.முப்பத்தாறு ஆண்டுகள் தருமரின் ஆட்சி நீடித்திருந்தது.தரும நெறி எங்கும் தழைத்து ஓங்கியது.
நூறு பிள்ளைகளை பறி கொடுத்த திருதராட்டிரனையும், காந்தாரியையும் தனது இரு கண்களைப் போல் கருதிப் பாதுகாத்து வந்தார்.பிள்ளைகளைப் பறி கொடுத்த தந்தைக்கும்,தாய்க்கும் ஏற்பட்ட வேதனையைக் கண்டு தருமர் மனம் வாடினார்.அவர்களுக்கு மனக்குறை ஏதும் ஏற்படாதவாறு நடந்துக் கொள்ள வேண்டும் எனத் தம்பியரிடம் கூறினார்.துரியோதனன் காலமெல்லாம் தந்தைக்குத் தொல்லை கொடுத்து வந்தான்.ஆனால் தருமரோ..தன் தந்தை பாண்டு இருந்திருந்தால் எப்படி அவரைப் பார்த்துக் கொள்வாரோ அதைவிடப் பல மடங்கு அன்புடன் பெரியப்பாவிடம் நடந்து கொண்டார்.காலப் போக்கில் தன் மக்கள் இல்லாத குறையைத் திருதராட்டிரன் மறக்கும் வண்ணம் தருமர் நடந்துக் கொண்டார்.
தருமரைப் போலவே குந்தியும், திரௌபதியும் திரிதிராட்டினனுக்கும்,காந்தாரிக்கும் மனம் கோணாது பணிவிடை செய்தனர்.
பெரியப்பாவிற்கு மனம் கோணாமல் நடக்க வேண்டும் என தருமர் உரைத்தாலும், பீமன் மட்டும் சிறிது மாறுபாடாகவே நடந்து கொண்டான்.தாங்கள் அனுபவித்த துன்பங்களுக்கு எல்லாம் உடந்தையாக இருந்ததற்காக திருதிராட்டிரன் காதில் விழுமாறு எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தான்.இவற்றைக் கேட்ட திருதிராட்டிரன் மனம் புண்பட்டாலும்..காலப்போக்கில்..பீமன் சொல்வது உண்மைதானே என நினைத்து பண்பட்டான்.
தருமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுப் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன.தருமரின் உபசரிப்பில் திருப்தியாய் இருந்தாலும், திருதிராட்டினன் கானகம் சென்று கடுந் தவம் புரிந்து இவ்வுலக வாழ்க்கையை முடிக்க எண்ணினார்.மனதில் முன்னர் இருந்த ஆசாபாசங்கள் இப்போது இல்லை.பிள்ளைப் பாசத்தால் செய்த கொடுமைகளை எண்ணி எண்ணி மனம் திருந்தியவனாகத் திருதிராட்டினன் காட்சியளித்தான்.
க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்தவர்கள் போர்க்களத்தில் போர் புரிந்து வீர மரணம் அடைய வேண்டும் அல்லது முதிர்ந்த வயதில் கானக வாழ்க்கை மேற்கொண்டு தவம் இயற்றி உலக வாழ்க்கையை முடிக்க வேண்டும்.போர்க்கள மரணத்திற்கு திருதிராட்டிரனுக்கு வாய்ப்பில்லை.எனவே வனத்திற்குச் செல்ல விரும்பினான்.
ஒருநாள் சான்றோர்களை அழைத்து தனது எண்ணத்தை புலப்படுத்திப் பேசினான்.'அன்புள்ளம் கொண்டவர்களே! கௌரவ வம்சமே வீழ்ச்சி அடைந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.அதன் அழிவிற்கு நானும் ஒரு காரணம்தான்.புத்திர பாசத்தால் துரியோதனன் சொன்னவாறெல்லாம் நடந்து கொண்டேன்.பீஷ்மர் போன்ற மேலானவர் கூற்றிற்கு எல்லாம் செவி சாய்க்காது புறக்கணித்தேன்.என் தம்பியரின் புதல்வர்களுக்கு எல்லையற்ற தொல்லை கொடுத்தேன்.தருமனையா பகைத்தேன்...தருமத்தை அல்லவா பகைத்தேன்.
கண்ணனின் பேச்சைக் கேட்காததால் இப்போது துன்பத்தை அனுபவிக்கிறேன்.பாண்டவர்களுக்கு நாடு தராதது மட்டுமல்ல..அவர்களுக்கு மாபாதகக் கொடுமைகளைச் செய்தேன்.நான் செய்த தவறுகள் என் மனதைத் துளைத்துத் துன்புறுத்துகின்றன.இதுவரை கண்ணை மட்டுமா இழந்திருந்தேன்..கருத்தையும் அல்லவா இழந்திருந்தேன்.இப்போதுதான் அறிவுக் கண் திறக்கப் பெற்றேன்.குருக்ஷேத்திர போருக்குப் பின் பாண்டவரின் உபசரிப்பால் அறிவுக் கண் திறந்தேன்.
செய்த தவறுக்கு எல்லாம் பிராயச்சித்தம் தேடுகிறேன்.சில நாட்களாகக் கஞ்சியை மட்டுமே பருகி வருகிறேன்.சுவையான உணவு உட்கொள்வதில்லை.நாள் தோறும் ஜபம் செய்கிறேன்.தர்ப்பைப் புல்லையே படுக்கையாகக் கொண்டு அதில் படுத்துக் கிடக்கிறேன்.இரவில் உறக்கம் இல்லை.காந்தாரியின் நிலையும் இதுவே.நூறு மகன்களை
இழந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
இவ்வாறு அவையோரை நோக்கிக் கூறிய திருதிராட்டினன் தருமரைப் பார்த்து,' உனக்கு எல்லா நன்மைகள் உண்டாகட்டும்.உன்னால் நான் நன்கு கவனிக்கப்படுகிறேன்.காந்தாரியும் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறாள்.திரௌபதிக்கும்,பண்டவர்களான உங்களுக்கும் தீங்கு இழைத்த கொடியவர்கள் அதற்கான தண்டனையைப் பெற்றுவிட்டார்கள்.தற்போது எனக்கும் , உன் தாயான காந்தாரிக்கும் புண்ணியம் அளிக்கும் செயலை நான் செய்ய வேண்டும்.அரசன் என்பவன் மக்களை ஆள்பவன் மட்டுமல்ல.அவன் குடிமக்களுக்கு குரு போன்றவன்.ஒவ்வொருவருடைய ஆன்ம நலனுக்கும் அவன் உதவி செய்ய வேண்டும்.அதனால்..உன்னிடம் ஒன்று கேட்கிறேன்.அதற்கு நீ அனுமதி தர வேண்டும்.காடு செல்ல விரும்புகிறேன்..தருமா...தடை செய்யாதே'
நீ அனுமதி அளித்த பிறகு நானும், காந்தாரியும் காடு செல்வோம்.அங்கு மரவுரி தரிப்போம்.கந்த மூலாதிகளை உண்போம்.கடுந்தவம் செய்வோம்.அந்தத் தவத்தின் பயன் உனக்கும் கிடைக்கும்.மக்கள் செய்யும் பாவ புண்ணியத்தில் ஒரு பகுதி மன்னனைச் சாரும் என சான்றோர் கூறுகின்றனர்.எனவே எனக்கு அனுமதி கொடு' என்றார்.
இதைக் கேட்ட தருமர் வருந்தினார்.'அரசே..உங்கள் துயரை மாற்ற நாங்கள் முயற்சி செய்தோம்.எல்லாம் பயனற்று போயின.காலப்போக்கில் கவலைகளை மறந்திருப்பீர் என எண்ணி ஏமாந்து விட்டோம்.நீர் உணவு கொள்ளாமல் உபவாசம் இருப்பதும், தரையில் படுப்பதும் எங்களுக்குத் தெரியாமல் போயிற்று.நீர் மகிழ்வுடன் இருப்பது போல பாவனை செய்து மனதிற்குள் வேதனையாய் இருந்துள்ளீர்கள்.நீங்கள் படும் வேதனைக் கண்டு, எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.துரியோதனனிடம் எனக்கு கோபம் இல்லை.எல்லாம் விதியின் செயல்.நாங்கள் தங்களையும், பாண்டுவையும் வேறாக பார்க்கவில்லை.அதுபோல காந்தாரியையும் எங்கள் தாய் போலவே கருதுகிறோம்.ஆகவே எங்களை விட்டு காடு செல்ல நீங்கள் விரும்பினால்..நானும் உங்களுடன் வருவேன்..யாரேனும் நாட்டை ஆளட்டும்'என்றார்.
தருமரின் உரையைக் கேட்ட திருதிராட்டினன் மூர்ச்சித்து காந்தாரியின் மடியில் சாய்ந்தான்.தருமர் உடன் குளிர்ந்த நீர் தெளித்துக் கைகளால் வருடினார்.தருமரின் கைப்பட்டதும் திருதிராட்டினன் உணர்வு பெற்றான்.
அப்போது அங்கு தோன்றிய வியாசர் தருமருக்கு அறிவுரை வழங்கினார்.'தருமா..திருதிராட்டினன் விருப்பப்படியே செய்..புத்திரர்களை இழந்த சோகத்தாலும், முதுமையின் தளர்ச்சியாலும் திருதிராட்டினன் மிகவும் துன்புறுகிறான்.எல்லா ராஜரிஷிகளும் கடைசிக் காலத்தில் வனவாசத்தையே விரும்புகிறார்கள்.அவனுக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டது.தடுக்காதே! ராஜரிஷிகள் யுத்தத்தில் இறக்க வேண்டும் அல்லது கானகம் சென்று தவம் இயற்றிப் பரகதி அடைய வேண்டும்.இது உலக நியதி.எனவே இவனுக்கு அனுமதி கொடு.தவம் புரிய தக்க சமயம்தான் இது' என்ற வியாசரின் அறிவுரையைத் தருமரால் தட்ட இயலவில்லை.
பின்னர் திருதிராட்டினன் மக்களை நோக்கிப் பேசினான்,' என் அன்பு மக்களே..முன்னர் சந்தனு மாமன்னன் இந்நாட்டை சிறப்பாக ஆண்டான்.பின் என் தந்தை விசித்திரவீரியனும்
பிதாமகர் பீஷ்மரால் காப்பாற்றப்பட்டு நல்ல முறையில் ஆட்சிக் காத்தார்.பின் பாண்டுவின் ஆட்சியும் மாட்சியுடன் திகழ்ந்தது.துரியோதனன் பாண்டவர்களுக்குத்தான் தீங்கு இழத்தானே தவிர உங்களுக்கு ஒரு தீமையும் செய்யவில்லை'
இந்த நேரத்தில் உங்களிடம் ஒன்று வேண்டுகிறேன்.நான் உங்களுக்கு ஏதேனும் தீங்கிழைத்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.நான் காட்டிற்குச் செல்வதால் வருந்த வேண்டாம்.தருமன் எப்போதும் உங்களுக்கு நன்மையே செய்வான்.தருமன் தருமத்தின் உருவம் என்பதனை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.நான்கு லோக பாலகர்களுக்கு இடையில் பிரம்ம தேவன் இருப்பது போலப் பீமன், அர்ச்சுனன்,நகுலன் ,சகாதேவன் ஆகியோர் சூழ்ந்திருக்க தருமன் உங்களை நன்கு பாதுகாப்பான்.
பெரியோர்களே! உங்களிடம் இன்னொன்றையும் வேண்டுகிறேன்.நான் பெற்ற மைந்தரில் விகர்ணனைத் தவிர மற்றவர்கள் அறிவுத் தெளிவற்றவர்கள்.சுயநலம் மிக்கவர்கள்.அவர்களால் உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருக்குமேயாயின் அவர்களை மன்னித்துவிடுங்கள்.எங்கள் இறுதிக்காலத்தில் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் தவ வாழ்க்கைக்கு நீங்களும் அனுமதி கொடுங்கள்'என்றான்.
கண் இழந்த மன்னன் பேசியதைக் கேட்டு மக்கள் உள்ளம் உருகினர்.கண்ணீர் விட்டனர்.ஒன்றும் பேசாது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.கை குவித்து வணங்கிப் பிரியா விடை அளித்தனர்.
திருதிராட்டினையும்,காந்தாரியுயையும் பின் தொடர்ந்து குந்தியும், விதுரரும்,சஞ்செயனும் கானகம் சென்றனர்.நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையை அவர்கள் அறவே மறந்தனர்.
மறுமை இன்பத்தை வேண்டி நின்றனர்.துன்பம் நிறைந்த உலக வாழ்க்கையை நீத்த அவர்கள்;இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்னும் மேலுலக வாழ்க்கையைப் பெற மூன்றாண்டுகள் துறவு மேற்கொண்டு தியானம்,தவம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சமயம் காட்டுத்தீ எங்கும் பரவியது.தியானத்தில் இருந்த திருதிராட்டினன்,காந்தாரி,குந்தியை அத்தீ இரையாக்கிக் கொண்டது.அவர்கள் உடல்கள் வெந்து கரிந்து சாம்பலாயின.ஆனால் அவர்கள் உயிர்கள் சோதி வடிவமாய் மேலுலகம் நோக்கிச் சென்றன.காட்டித் தீ விதுரரையும்,சஞ்செயனையும் பாதிக்கவில்லை.அவர்கள் தியானத்தை மேற்கொள்ள இமய மலையை நோக்கிச் சென்றனர்.
பின் சில காலம் வாழ்ந்த இவர்களது சீரிய வாழ்வு ஊழி ஊழிக்காலம் போற்றும் வண்ணம் முடிவுற்றது.
(ஆஸ்ரம வாசப் பருவம் முற்றும்)