Monday, April 12, 2010

96-தருமரின் முடி சூட்டு விழா

பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன்,திரௌபதி,வியாசர்,கண்ணன் ஆகியோரின் இடைவிடா அறிவுரைகளால் தருமர் துக்கத்திலிருந்து விடுபட்டார்.தருமரின் முகத்தில் சோகம் அகன்று சாந்தம் தவழ்ந்தது.அவர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார்,பதினாறு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறினார்.பீமன் தேரைச் செலுத்தினான்.அர்ச்சுனன் வெண் கொற்றக் குடை பிடித்தான்.நகுல,சகாதேவன் இருவரும் வெண் சாமரம் வீசினர்.சகோதரர்கள் ஐவரும் ஒரு தேரில் செல்லும் காட்சி பஞ்ச பூதங்களையும் ஒரு சேரக் காண்பது போல இருந்தது.கண்ணனும், சாத்யகியும் ஒரு தேரில் சென்றனர்.திருதிராட்டிரன்..காந்தாரியுடன் ஒரு தேரில் ஏறிப் பின் தொடர்ந்தான்.குந்தி,திரௌபதி,சுபத்திரை முதலானோர் விதுரரைத் தொடர்ந்து பலவித வாகனங்களில் சென்றனர்.அலங்கரிக்கப்பட்ட யானைகளும்,குதிரைகளும் தொடர்ந்து சென்றன.அலை அலையாகத் தொடர்ந்து சென்ற மக்கள் கூட்டம் கடலே எழுந்தது போல இருந்தது.

அஸ்தினாபுரத்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.நகரை நன்கு அலங்கரித்தனர்.நகரம் கோலாகலமாகத் திகழ்ந்தது.தெருவெங்கும் மாலைகளும்,தோரணங்களும் காட்சியளித்தன.சந்தனமும்,கஸ்தூரியும் மலர் மாலைகளும் மணம் வீசி அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தின.'எங்கள் மாமன்னர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்க' என்னும் வாழ்த்தொலிகளுக்கிடையே தருமர் அஸ்தினாபுரம் அடைந்தார்.

தருமர் உயர்ந்த பொற் பீடத்தில் கிழக்கு முகமாக அமர்ந்தார்.அவருக்கு எதிரே அழகு மிக்க பொற் பீடத்தில் கண்ணன் அமர்ந்தார்.தருமர் நடுவில் இருக்க..பின்புறம் இருந்த பீடங்களில் பீமனும்,அர்ச்சுனனும் அமர்ந்தனர்.அழகான இருக்கையில் நகுலன்,சகாதேவன் ,குந்தி ஆகியோர் அமர்ந்தனர்.திருதிராட்டிரன் முதலான மற்றவர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.தருமர் அருகில் திரௌபதியை அமரவைத்துத் தௌமியர் விதிப்படி ஓமம் செய்தார்.கண்ணன் புனித கங்கை நீரால் தருமருக்கு அபிஷேகம் செய்து முடி சூட்டினார்.எங்கும் துந்துபி முதலான மங்கள வாத்தியங்கள் முழங்கின.அந்தணர்கள் வாழ்த்தினர்.

தருமர் அவையினரை நோக்கி' அவையோரே, எங்களது பெரிய தந்தை திருதிராட்டிர மாமன்னர் எங்களுக்கு தெய்வம் போன்றவர்..என் நன்மையை விரும்பும் அனைவரும் அவரையும் போற்றுதல் வேண்டும்.உங்களுக்கும், எங்களுக்கும் அவரே அரசர்.நீங்கள் அவருக்குச் செய்யும் நன்மையே எனக்குச் செய்யும் நன்மையாகும்.எனது இந்த விருப்பத்தை நீங்கள் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.' என்று கூறினார்.பிறகு அனைவரையும் அவரவர் இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் அரசியல் காரியம் தொடங்கியது.தருமர், பீமனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார்.விதுரரை ஆலோசனைக் குழுத் தலைவராக நியமித்தார்.சஞ்சயனை வரவு..செலவுகளைக் கவனிக்கும் பதவியில் அமர்த்தினார்.அர்ச்சுனனை படைத் தளபதியாக இருக்கச் செய்தார்.நகுலனை படைகளைக் கவனிக்குமாறு கட்டளையிட்டார்.சகாதேவனை எப்போதும் தன் அருகில் இருக்கப் பணித்தார்.அரச புரோகிதராகத் தௌமியர் நியமிக்கப் பட்டார்.பெரிய தந்தையைக் கண்ணும் கருத்துமாக அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வற்புறுத்தினார்.

தருமர் குருக்ஷேத்திர வெற்றிக்குக் காரணமாக இருந்த கண்ணனைக் கை கூப்பித் தொழுதார்.கண்ணனை நூறு நாமங்களால் போற்றிப் புகழ்ந்தார்.'யதுகுலத் திலகமே..உம் அருளால் இந்த அரசு எனக்குக் கிடைத்தது.உலகம் உம் அருள் பார்வையால் நிலை பெற்றுள்ளது. உமக்குப் பலகோடி வணக்கம்' எனப் பணிவுடன் வணங்கினார்.

பின்..துரியோதனின் மாளிகையைப் பீமனுக்கு வழங்கினார்.துச்சாதனனின் மாளிகையை அர்ச்சுனனுக்கு அளித்தார்.துர்மர்ஷனுடைய மாளிகையை நகுலனுக்கும்,துர்முகனுடைய மாளிகையைச் சகாதேவனுக்கும் கொடுத்தார்.'என் அன்புத் தம்பிகளே! என் பொருட்டு நீங்கள் இதுவரை எல்லையற்ற துன்பத்தை ஏற்றீர்.இனி இன்பத்துடன் வாழ்வீர் ' என்றார்.

பின் ,குடிமக்களை அழைத்து அறநெறியில் உறுதியாய் இருக்குமாறு கூறினார்.

1 comment:

பித்தனின் வாக்கு said...

அய்யா நல்லா சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post a Comment